மாணவர்கள் தவறான வழியில் செல்லாது வளப்படுத்துவது துறைசார் அதிகாரிகளது கடமை: டக்ளஸ்
யாழ். மாவட்ட (Jaffna) பாடசாலைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் தன்னாலான உதவிகளை மேற்கொண்டுவரும் நிலையில் வேறு வழிகளில் மாணவர்களின் புலன்கள் திசை திரும்பாது வளப்படுத்துவது விளையாட்டுத்துறை ஆசிரியர்களதும் துறைசார் அதிகாரிகளதும் கடமை என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸால் இன்று (05.04.2024) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு துறை
மேலும் தெரிவிக்கையில், ”இன்றையதினம் தெரிவு செய்யப்பட்ட 28 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் தேவையாக உள்ளது என்பதை நான் அறிவேன்.
அதுமட்டுமல்லாது வழங்கப்படும் இந்த உதவிகளும் பாடசாலைகளுக்கு போதாதென்பது தெரியும். இதனால் குறித்த அமைச்சுடன் மேலும் பல உதவிகளை வழங்குவதற்காக பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றேன்.
அத்துடன் தனியார் துறையினருடனும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அவர்களது ஒத்துழைப்புக்களையும் பெற்று மாவட்டத்தின் விளையாட்டு துறையின் தரத்தை உயர்த்த முடியும் என்று நம்புகின்றேன்.
இதேவேளை எமது மாணவர் பருவ காலத்தில் அதாவது அன்றிருந்த காலச்சூழலில் ஆயுதப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்து அனைத்தையும் தலைகீழாக மாற்றி சீரழித்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
நானும் இந்த ஆயுதப்போராட்ட போராளிகளில் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டம் ஒன்று எமது இனத்துக்கு தேவையாகவே இருந்தது. அதற்காக ஆயுத போராட்டத்தை நான் நியாயப்படுத்தவில்லை. முன்னெடுத்த அந்த தேவையை பயன்படுத்தி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நாம் பெற்றுக் கொண்டோம்.
மக்களின் வாழ்க்கை
அதிலிருந்து எமது போராட்டத்தை கைவிட்டு அதற்கூடாக நாம் முன்னோக்கி சென்றிருக்க வேண்டும்.
ஆனாலும் 2009இல் அது முடிவுக்கு வந்துள்ளது. அமைதியாக மக்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தபோது மீண்டும் தவறான பாதைக்கு செல்லும் வகையில் இளைஞர்களிடையே தூண்டுதல்களை சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலை எமது மக்களை மேலும் அதளபாதாளத்துக்கே கொண்டு செல்லும்.
எனவே, ஆசிரியர்கள் குறிப்பாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் இவற்றில் அதிக அக்கறை செலுத்தி மாணவர்களது புலன்கள் திசை திரும்பாத வகையில் அவர்களை வழிப்படுத்துவது அவசியம்“ என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |