மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களால் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டு தமது கால்நடைகளை வளர்ப்பதற்கான சூழல் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என மட்டக்களப்பு (Batticaloa) மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள், கமநல அமைப்பினர் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் மீண்டும் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
குறித்த மேய்ச்சல் தரை காணி பிரச்சினைக்குரிய தீர்வினை காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (04.04.2024) சித்தாண்டியில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட போதே பண்ணையாளர்களால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அழுத்தங்கள்
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு சித்தாண்டியில் முன்னெடுத்துவரும் போராட்டம் 203 நாட்களை கடந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கான தீர்வினை காணும் வகையில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைவாக இந்ந சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு தொடர்ச்சியாக வடக்கு கிழக்கிலும் நாடாளுமன்றத்திலும் அழுத்தங்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இதுவரையில் பசியினாலும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் தாக்குதல்களினாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதோடு அவற்றிற்கான நஸ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என்றும், அவர்களை அப்புறப்படுத்தி தமது காணிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இதன்போது பண்ணையாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதிக்கு களவிஜயத்தினை எதிர்வரும் நாட்களில் மேற்கொண்டு தீர்மானங்களை எடுப்போம் என மகாவலி அபிவிருத்தி சபையினரால் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனாலும் தமது கோரிக்கைகள் குறித்து முறையான பதில்கள் வழங்கப்படவில்லையெனவும் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து தமக்கு திருப்தியில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |