யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள்
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாணவர்கள் நால்வரும் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதி ஆலய கேணியடியில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று இன்று(24.09.2022) பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
போதைப்பொருள் பாவனை
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மாணவர் ஒருவர் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளனர். ஏனைய மூவரும் மதுபானம் அருந்தியவாறு இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு வருகை தந்ததாகவும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபானம் அருந்தியதாகவும் மாணவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
பெற்றோருக்கு எச்சரிக்கை
குறித்த மாணவர்கள் க.பொ.த சாதாரணதரத்தை முடித்து தற்போது உயர்தரத்தில் கல்வி பயிலும் 17, 18 வயதுடையவர்கள் என விசாரணையில் கண்டற்றியப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோரை அழைத்து மூத்த பொலிஸ் அத்தியட்சகர், பிள்ளைகள் தொடர்பில் கண்காணிப்புடன் நடந்துக்கொள்ளுமாறு எச்சரித்துள்ளனர்.
பாடசாலையில் பயிலும் மாணவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதனால் ஏற்படும் பாதக நிலை தொடர்பில் எடுத்துரைத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எச்சரித்து பெற்றோரிடம் மாணவர்களை ஒப்படைத்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையால் உயிரிழப்பு
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்தியதனால் உயிரிழந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையிலும் அவரது உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்டமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூலிக்காக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறியுள்ளார்.
செய்தி-கஜிந்தன்





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
