தமிழர் பகுதியில் மரதன் ஓடிய மாணவனிற்கு நேர்ந்த கதி! வைத்தியசாலையை முற்றுகையிட்டதால் பதற்றம்
அம்பாறை, அக்கரைப்பற்று – திருக்கோவில் பகுதியில் மரதன் போட்டியில் பங்குபற்றிய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தபோக்கு காரணமாகவே மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவரொருவரே உயிரிழந்துள்ளார்.
அவசர சிகிச்சை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை இல்ல மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார்.
இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சிகிச்சைக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவருக்கான சி.பி.ஆர் சிகிச்சை உட்பட போதியளவான சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் எனினும் போதிய வைத்திய உபகரணங்களைக் கொண்ட நோயாளர் காவு வண்டி இல்லாததன் காரணமாக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற முடியாமல் போனதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலை நிர்வாகத்தினரது அசமந்தபோக்கு
வைத்தியசாலை நிர்வாகத்தினரது அசமந்தபோக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் அப்பகுதியில் கலகம் அடக்கும் காவல்துறையினர் உட்பட படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல் - குமார்