தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த பாடசாலை மாணவி.. சந்தேகம் வெளியிடும் பெற்றோர்
பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று ( 27.07.2026) பதிவாகியுள்ளது.
இது குறித்து தெரிய வருகையில், பொகவந்தலாவை - மோரா பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.
மரணத்தில் சந்தேகம்..
இந்நிலையில், பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட வைத்தியசாலையாக இருந்தும் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்படும் அந்த வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து பொகவந்தலாவை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ஊடகத்திற்கு அறிவித்தனர்.
எனினும், மாணவியின் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.