மத்திய மாகாண பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கனமழையால் ஏற்படக்கூடிய பேரிடர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய மாகாணத்தில் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூடுவது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரத்தை வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வலயக்கல்வி பணிப்பாளர்களும், அதிபர்களும் கலந்துரையாடி உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, தேவைப்பட்டால், இது தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சக செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டு ஆலோசனை பெறப்படலாம் என்று மத்திய மாகாண ஆளுநர் சுரங்க பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரங்க பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், நிலவிவரும் மழையின் காரணமாக நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள 38 பாடசாலைகள் நேற்று (21) மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாவலப்பிட்டியாவில் 66 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்கள் இம்புல்பிட்டிய கல்லூரி மற்றும் அப்பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலவாக்கலை பகுதியில் உள்ள 6 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளளவில் 49% ஆக உள்ளதாகவும், எனவே யாரும் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பொறுப்புப்பொறியாளர் தெரிவித்ததாக ஆளுநர் கூறியுள்ளார்.
மேலும், நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள 16 நீர் திட்டங்கள் கனமழையால் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றைச் சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்பில் நீதிமன்ற வளாகம்! இன்று வெளியாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு