மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 08ஆம் திகதி மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதன் ஊடாக 1981ஆம் ஆண்டு 66ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் எனப் பெயர் மாற்றம் பெறுவது உள்ளிட்ட திருத்தங்களுக்கு உள்ளாகிறது.
இதற்கமைய சட்ட மூலத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதன் மூலம் 2022ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.