ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் குறித்து ஆணையாளர் வெளியிட்ட தகவல்
இந்த வருடம் நடத்தப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும் மீண்டும் அது நடத்தப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர நேற்று (14) இதனை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை
குறித்த பரீட்சை வினாத்தாளின் சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் ஆராய்ந்த குழுவொன்று மீண்டும் பரீட்சையை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று பரிந்துரைத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
எனவே கசிந்ததாக நம்பப்படும் மூன்று கேள்விகளுக்கான முழு மதிப்பெண்கள் அனைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் வினாத்தாளின் 8 கேள்விகள் கசிந்துள்ளதால் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று சில மாணவர்களின் பெற்றோர்கள் முன்னர் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இந்த கோரிக்கை தொடர்பில் பெற்றோர்கள் தேவையான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |