மின்சார வாகனங்களின் இறக்குமதியை அதிகரிக்க அரசு திட்டம்
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார வாகனங்களின் (EV) எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டிற்குள் 70% இலக்குகளை அடையும் வகையில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயற்படுத்தும் திட்டங்களுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ரீதியில் பிரபலம்
மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது சர்வதேச ரீதியில் பிரபலமாகிவிட்டது. உலக சந்தையில் மின்சார வாகனங்களின் விலை அதிகமாக இருந்தாலும், படிப்படியாக குறைந்து வருகிறது.
இதேவேளை பெட்ரோலிய வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டம் தற்போது நெதர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் நடக்கிறது. இதேபோன்று இலங்கையிலும் சமீப காலத்தில் மின்சார முச்சக்கரவண்டி அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியுடன் இலங்கை படிப்படியாக அந்த இலக்கை 2030 ஆம் ஆண்டளவில் அடைய வேண்டும் எனவும் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.