அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல பட்டங்களை வழங்க திட்டம்
இலங்கையின் கல்வித் தன்மையை மேம்படுத்தும் நோக்கில், அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல பட்டங்களை வழங்குவதற்கான திட்டங்களை செயற்படுத்தவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (14) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர்கல்வி அபிவிருத்தி
சர்வதேச கல்வி வல்லுநர்களின் நுண்ணறிவுகளின் அடிப்படையில், இலங்கைக்குள் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் தற்போது ஸ்தாபன கட்டத்தில் இருப்பதாகவும், மூன்றாவது பல்கலைக்கழகம் மே மாதத்திற்குள் செயல்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் குறிப்பிடத்தக்க வகையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கண்டியில் திறக்கப்பட உள்ளதோடு, மற்றைய இரண்டு பல்கலைக்கழகங்கள் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்த கிளைகளைக் கொண்டிருக்கும்.
இதற்கிடையில், விஜேயதாச ராஜபக்ச குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் குழு அறிக்கையை ஒருங்கிணைத்து புதிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
கல்வி நிலைமை
இந்நிலையில், அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சரை அவுஸ்திரேலிய தூதரகத்தின் ஊடாக இலங்கைக்கு அழைத்து, அவருடன் மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் 10 பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதோடு, எமது கல்வி நிலைமையை அவதானித்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தனியார் உயர்கல்வித் துறையை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்றும் கல்வியை வணிக மயமாக்குவதற்கான எந்த திட்டங்களும் இல்லை எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் உறுதியளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |