மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள் - சத்தியலிங்கம் வலியுறுத்து
தமிழ் மக்களது உரிமைக்கான நீண்ட போராட்டத்தின் விளைவான மாகாண சபை முறைமைக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியாவில் நேற்று (19.11.2025) இடம்பெற்ற பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மீதான விவாதத்திலே கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல்களை நடாத்துவதற்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிவருகிறோம்.
முழு அதிகார பலம்
தமிழ் மக்களது உரிமைக்கான நீண்ட போராட்டத்தின் விளைவாகவே மாகாணசபை முறைமை அரசியல் அமைப்பினூடாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாகாண சபையை தமிழ் மக்கள் தங்களது தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இருந்த போதும் குறைந்த அதிகாரங்களை கொண்ட அந்த மாகாண சபையைக் கூட இயங்கு நிலையில் வைத்திருப்பதற்கு எந்தவொரு அரசும் விரும்பாத நிலையை பார்க்கும்போது மாறிமாறி ஆட்சிப்பீடம் ஏறும் அரசாங்கங்கள் இந்த நாடு ஒரு பல் இன, பல மொழி பேசுகின்ற பல தேசிய இனங்கள் கூடி வாழும் நாடாக ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை உணர்ந்துகின்றது.
அவ்வாறு தேர்தல்களை நடாத்தினால் கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபைகளினால் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இயலுமையை மட்டுப்படுத்துவதே வரலாறு.

உள்ளுராட்சி மன்றங்களாக இருக்கட்டும் மாகாண சபைகளாக இருக்கட்டும் முழு அதிகார பலத்துடன் மத்திய அரசின் அதிகார, அரசியல் தலையீடின்றி சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |