'13' நாட்டுக்கு சாபக்கேடு: முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளியோம்! சரத் வீரசேகர
வீடு தீப்பற்றி எரியும் போது புகைப்பிடிக்க முயற்சிப்பதை போன்று தமிழ்த் தலைமைகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எக்காரணிகளுக்காகவும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது, 13ஆவது திருத்தம் நாட்டுக்குச் சாபக்கேடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டைப் பிளவுப்படுத்துமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.
இலங்கை நிலப்பரப்பால் சிறிய நாடு, ஒன்பது மாகாணங்கள் ஊடாக அரச நிர்வாகம் வேறுபடுத்தப்பட்டுள்ளமை அவசியமற்றது. இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வரலாற்று ரீதியில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள்.
ஒருமைப்பாட்டை முன்னிலைப்படுத்தித்தான் 69 இலட்சம் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தேவைகளுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தம் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.
இலங்கையில் 13ஆவது திருத்தம்
இந்தியாவின் தேவைக்காகவே அரசமைப்பின் 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முன்னிலைப்படுத்திச் செயற்படும் இலங்கையில் 13ஆவது திருத்தம் அவசியமற்றது.
13ஆவது திருத்தம் ஊடாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு பகிரப்பட வேண்டும் எனத் தமிழ்த் தலைமைகள் அழுத்தம் பிரயோகிக்கின்றார்கள். காணி அதிகாரம் மத்திய அரசிடம் காணப்பட வேண்டும். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்க வேண்டிய தேவை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆகவே, காணி அதிகாரம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது. பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடம் மாத்திரம் பொறுப்பாக்கப்பட வேண்டும். நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் பொறுப்பாக்கினால் பொலிஸ் ஆணைக்குழு எவ்வாறு சுயாதீனமாகச் செயற்படும்? நாட்டில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளதுடன், விடுதலைப்புலிகள் அமைப்பின் மீள் எழுச்சிக்கான முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான பின்னணியில் வடக்கு மாகாணத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும். அரசியமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஒருசில விடயங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை வெள்ளை யானை போன்று பயனற்றது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.
நாட்டைப் பிளவுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு
இறங்கிய மக்கள் தேசியத்துக்காகப் போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
