“ஒரே நாடு ஒரே சட்டம்“ செயலணிக்கு புதியவர் தலைமையேற்க வேண்டும்: சரத் பொன்சேகா கோாிக்கை
“ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட செயலணிக்கு மகாநாயக்க தேரரால் பரிந்துரைக்கப்பட்ட பிக்கு ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்தக் கோாிக்கையை விடுத்துள்ளாா்.
செயலணிக்கு தலைமை தாங்கும் துறவி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும் என்று பொன்சேகா செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.
தமக்கு வழங்கப்பட்ட நியமனம், தமது சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் என்று செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து, அவர் செயலணியை எவ்வாறு கையாளப் போகிறார் என்பதையே காட்டுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரு சட்டம்’ என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவது மிகுந்த சிரத்தையுடன் கையாளப்பட வேண்டும்.
நாட்டில் வாழும் சில குறிப்பிட்ட மக்களுக்கு பயன்பாட்டில் உள்ள, கண்டிச் சட்டம், தேச வழமைச்சட்டம், முஸ்லிம் சட்டம் போன்றவற்றை யராலும் நீக்க முடியாது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளாா்.