விடுதலைப் புலிகளுக்கு எதிராக சலே வழங்கிய உளவுத் தகவல்! அமைக்கப்பட்ட தனிக்குழு தொடர்பில் பொன்சேகாவின் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக உளவுத் தகவல்களை வழங்க சுரேஷ் சலே குழுவொன்றை நியமித்திருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உளவுத் தகவல்களுக்காக தனிக்குழு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக சுரேஷ் சலே வழங்கிய உளவுத் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல.
அந்த உளவுத் தகவல்களை வழங்குவதற்காக, காலாட்படை மற்றும் பீரங்கிப்படை ஜெனரல் ஒருவரின் கீழ் ஒரு தனி குழுவை அவர் நியமித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நான் எந்த காரணமும் இன்றி எட்டு மாதங்கள் கடற்படைத் தலைமையகத்தில் ஒரு சிறிய சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். அப்போது கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகராக இருந்த சுரேஷ் சலேவிடம் திரும்புவதற்கான நேரம் இது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சஹ்ரானுக்கு பணம்
இதேவேளை சஹ்ரான்களுக்கு சலே பணம் கொடுத்ததாகவும், அவர்களுக்குள் நெருங்கிய உறவு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிஐடியில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எலிகள் இருப்பதாகவும், தனது வீட்டில் மூன்று எலிப் பொறிகள் இருப்பதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.