16 வருட சிறை! அரசியல்வாதிகள் பலருடன் பலத்த பாதுகாப்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சரண குணவர்தன
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன வெலிக்கடை சிறைச்சாலையின் 'K' அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வெலிக்கடை சிறைக்குக்கொண்டுவரப்பட்டு, கைதியாக பதிவு செய்யப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகள்
இதேவேளை, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தாநந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ, மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் இந்த சிறைக்கூடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இவர்கள் சிறப்பு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், மேற்கூறிய வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri