தாயாருக்குச் சொல்லப்பட்ட சாந்தனின் மரணச் செய்தி
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தனின் மரணச் செய்தி அவரது தாயாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி ஊடாக அவரது மரணச் செய்தி தாயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயிடம் சொல்லப்பட்ட செய்தி
உடல் நலக் குறைவு காரணமாக இலங்கைக்கு திரும்பவிருந்த இறுதித் தருணத்தில் கடந்த 28ஆம் திகதி அதிகாலை சாந்தன் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடலை இலங்கைக்கு எடுத்து வருவதிலும், இலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதிலும் பல்வேறு இழுபறி நிலைகள் காணப்பட்டன.
இந்த நிலையில், தன்னுடைய தாயாரிடம் தனது அண்ணனின் மரணச் செய்தியை கொண்டு செல்ல இரண்டு நாட்கள் தேவைப்படுவதாகவும், தாயை சந்திக்க விரும்புபவர்கள் இரு தினங்களின் பின்னர் சந்திக்குமாறும் சாந்தனின் சகோதரர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மீள் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
அதன் பின்னர் நேற்றையதினம் பிற்பகல் சாந்தனின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தை நோக்கி உடலை எடுத்துச் செல்வதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தற்போது சாந்தனின் உடல் தமிழர் தாயகத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படும் நிலையில் வவுனியா, கிளிநொச்சி என தமிழர் பகுதிகளில் ஒன்று திரண்டுள்ள பொதுமக்கள் கண்ணீர் மல்க தங்களது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை சாந்தனின் உடலைத் தாங்கிய ஊர்தி இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு சென்றடையவுள்ள நிலையில் தற்போதுதான் அவரது தாயாரிடம் சாந்தனின் மரணச் செய்தி சொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |