விடுதலைப் புலிகளின் தலைவரது நம்பிக்கைக்கு உரிய சாந்தன்! தாயார் என்ன பாடு படுகிறாரோ... வைகோ வேதனை
சாந்தன் மிக நல்ல எழுத்தாளர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். தன் தாயாரைப் பார்க்க வேண்டும் என்பதையே இறுதி ஆசையாகக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய தாயார் என்ன பாடுபட்டுக் கொண்டிருப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் தமிழகத்தில் நேற்று காலமனார்.
தலை சிறந்த எழுத்தாளர்
இந்தநிலையில், அவர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சாந்தனுக்கு திருமணம் ஆகவில்லை. 55 வயதாகின்றது. 32 ஆண்டுகள் தமிழ்நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் வாடி வதங்கியவர். நல்ல எழுத்தாளர். நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கின்றார். தலை சிறந்த எழுத்தாளர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஈழத்திலே பிறந்து, ஈழம் மலர்வதற்காக இந்த மண்ணுக்கு வந்து, இங்கு சித்திரவதைகளை கொடிய இருட் சிறையிலே அனுபவித்து கடைசியில் மடிந்து போனார்.
“எனது தாயாரிடத்திலே என்னை அனுப்பி விடுங்கள். நான் தாயாரைப் பார்க்க வேண்டும்” என்று தனது கடைசி ஆசையைச் சொன்னார்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றுங்கள்
இன்னும் இவருடன் சேர்த்து வெளியில் வந்த ரொபர்ட் பாயஸ், முருகன் உள்ளிட்டவர்களையும் அவர்கள் எங்கு போக ஆசைப்படுகின்றார்களோ அங்கு அனுப்பி வையுங்கள்.
அவர்களோடு வெளியில் வந்த பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. வாழ்க்கையின் வசந்தம் எதனையும் அவர்கள் பார்க்கவில்லை.
ஆனால், அவர்களது உள்ளத்தில் தலைவர் இருக்கின்றார். தமிழீழம் இவர்களது நெஞ்சுக்குள் இரத்தக்கறை படிந்த கோடுகளால் வரையப்பட்டிருக்கின்றது. அவர்களுடைய தியாகம் ஒப்பற்றது.
ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக தமிழகத்திலும் பல இளைஞர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். போராடினார்கள். ஆனால் இந்திய அரசும், உலக வல்லரசுகளும் இணைந்து ஆயுதங்களைக் கொடுத்து எவராலும் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது படையைத் தோற்கடித்தார்கள்.
இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள். சாந்தன் தனது ஊருக்கு போக வேண்டும், தாயாரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். இப்போது அவருடைய தாயார் என்ன பாடுபட்டுக் கொண்டிருப்பாரோ என தனது வேதனையை வெளியிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |