யுகதனவி உடன்படிக்கையை விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: சட்டமா அதிபர்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யுகதனவி மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை குறித்து உடன்பாடில்லாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னம் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை குறித்து அமைச்சரவையில் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் முரண்பாடு இருந்தால் அமைச்சரவையை விட்டு அமைச்சர்கள் விலக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதன் மூலம் உடன்படிக்கையை அங்கீகரிப்பதாகவே பொருள்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவையில் அங்கம் வகித்துக் கொண்ட அமைச்சரவை தீர்மானத்தை விமர்சனம் செய்வது கூட்டுப் பொறுப்பினை மீறும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரையில் அங்கம் வகித்துக் கொண்டு கூட்டுப் பொறுப்பினை மீறுவது பாரதூரமான குற்றம் என வெளிநாட்டு உச்ச நீதிமன்றங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையினால் எவரினதும் அடிப்படை உரிமைகள் மீறப்படப் போவதில்லை என அவர் உச்ச நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பிலான உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மா அதிபர் குறித்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுவிற்கு ஆதரவாக அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீதிமன்றிற்கு சத்தியக்கடதாசிகளை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.