சுற்றாடல் அமைச்சரின் நடவடிக்கையால் மணல் மாபியாக்களின் அலுவலகம் முற்றுகை
சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அதிரடி நடவடிக்கையையடுத்து சட்டவிரோதமாக நீண்டகாலமாக செயற்பட்டு வந்த மணல் மாபியாக்களின் அலுவலகம் ஒன்று நேற்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
அமைச்சின் அதிகாரிகள் மற்றும் புவியியல் சேவை மற்றும் நில அகழ்வுப் பணியக புலனாய்வு அதிகாரிகள் ஆகியோருக்கு அமைச்சர் விடுத்த பணிப்புரைக்கமைய இரண்டு கிழமைக்குள் இந்த அதிரடி சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்ததாவது,
மணல் வியாபாரம் மற்றும் நில அகழ்வுக்கு சட்டவிரோத அனுமதி
"புவியியல் சேவை மற்றும் நில அகழ்வுப் பணியகத்தின் அரச இலட்சினையை போலியாகப் பயன்படுத்தி, மணல் வியாபாரம் மற்றும் நில அகழ்வுக்கு அனுமதி வழங்கிய இடமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதனோடு தொடர்புடைய சிலரும் கைது செய்யப்பட்டனர். இங்கிருந்த இரண்டு டிப்பர்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இவை, சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்றவை என நம்பப்படுகிறது. குருநாகல் போக்கரல்லயில் இந்தப் போலி இடம் கடந்த ஐந்து வருடங்களாக செயற்பட்டுள்ளது.
அமைச்சின் புலனாய்வுப்பிரிவினர் நடாத்திய சுற்றிவளைப்பில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து ஐநூறு அனுமதிப்பத்திரங்கள் (லைசன்ஸ்) நாளொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத செயற்பாடுகள்
அரசாங்கத்தால் இரண்டாயிரம் ரூபா அறவிடப்படும் ஒரு லைசன்ஸுக்கு இவர்கள், தலா ஆறாயிரம் ரூபா வீதம் அறவிட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக நாளொன்றுக்கு முப்பது இலட்சம் ரூபா அறவிடப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத செயற்பாடுகளை இயக்கி வந்த, இவர்களது அலுவலகம் குருநாகல் போக்கரல்ல என்ற இடத்தில் இயங்கி வந்துள்ளது.
பொலன்னறுவை வெலிக்கந்தயில் வைத்து சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற
டிப்பர்கள் முதலில் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர்களிடமிருந்து பெறப்படும் தகவலைத் தொடர்ந்து இதன் பின்னணியிலுள்ளோரை
கைது செய்வது மற்றும் இதுபோன்ற வேறு இடங்கள் எங்காவது இயங்குகின்றனவா என்ற தகவல்கள் பெறப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.