மணல் வியாபாரத்தில் மாபியாக்களின் தலையீட்டை தடுக்க நஸீர் அஹமட் நடவடிக்கை (Photos)
மணல் வியாபாரத்தில் நிலவும் மாபியாக்களின் தலையீடு மற்றும் முறைகேடுகளை ஒழித்து, நியாயமான சேவைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் கட்டட பணிகளுக்கு தேவையான மண்ணை முறையாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டம் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மணல் அகழ்வு கைத்தொழில்
இந்த கூட்டத்தில், மணல் அகழ்வு தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதற்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் முறையற்ற மணல் அகழ்வுகள், சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் இதைத் தடுப்பதற்குரிய வழிகள் குறித்தும் அமைச்சின் உயரதிகாரிகள் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து முறையான மணல் அகழ்வுகளால், சாதாரண பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இடைத்தரகர்கள் தலையிடுவதால், விலைகள் தேவையற்ற வகையில் உயர்கிறது. இதனால் சாதாரண வீடொன்றைக் கட்டுவதற்கு கூட மக்களால் மணலை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மணல் கடத்தலில் ஈடுபடுவோர் இணங்காணல்
ட்ரெக்டர்கள், லொறிகளில் மணலை ஏற்றுவதை தவிர்த்து தொடருந்து இழுவைப் பெட்டிகளில் ஏற்றுவதற்கும் நேரடியாக, மணல் கடத்தலில் தொடர்புடையோரை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவும் நஸீர் அஹமட் இதன்போது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் ரூபசிங்க, புவியியல் சேவை மற்றும் நில அகழ்வுப் பணியகத் தலைவர் செனரத் ஹேவகே மற்றும் அமைச்சரின் ஆலோசகர் திரு ஹெட்டியாராச்சி உட்பட சில முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக செய்தி- நவோஜ்