வாகன விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர்: பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப், முன்னால் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி பின்னர் வீதியின் அருகில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், விபத்து தொடர்பில் கொள்கலன் பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜீப் வண்டி சாரதி தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், தற்போது இராஜாங்க அமைச்சர் உட்பட உயிரிழந்தவரின் சடலம் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள்,உறவினர்கள் என பலரும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |