13 இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயார்! சாணக்கியனின் அறிவிப்பு (Video)
ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும், இல்லாவிடின் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கையர்களை சந்தித்து பேசிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கூறுகையில், பல்வேறு காலக்கட்டங்களில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த அல்லது வெளியேற்றப்பட்ட புலம்பெயர் இலங்கையர்களை நோர்வேயில் சந்திக்கிறேன். கடந்த இருவாரங்களில் சுவிட்சர்லாந்தில் லீடிங் வித் பாஸ் என்ற தலைப்பில் கடந்த காலங்களை எவ்வாறு முகம் கொடுப்பது, யுத்த காலத்திலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நாடு என்ற ரீதியில் எவ்வாறு முகம் கொடுப்பது.
இதிலிருந்து எவ்வாறு வெளியேவருவது, முன்னேறி செல்வது தொடர்பில் அவதானம் செலுத்த சுவிட்சர்லாந்து நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டேன். சுவிட்சர்லாந்திற்கு அண்மைய நாடாக நோர்வே உள்ளதால் இங்கு வந்துள்ளேன்.
பொருளாதார நெருக்கடி
விசேடமாக தற்போது இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. அதிகாரிகளும், பொது மக்களும், பொலிஸாரும், இராணுவத்தினரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்கிறார்கள். ஊழல் மோசடி, இலஞ்சம் ஆகியவை தற்போதைய நிலைமைக்கு காரணம் என குறிப்பிடுகிறார்கள்.
இல்லை நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமலிருப்பதே தற்போதைய பிரச்சினைக்கு பிரதான காரணியாக உள்ளது. 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து தமிழ், முஸ்லிம், சிங்களம் என இலங்கையர்கள் வேறுப்படுத்தப்படுத்தப்பட்டதால் தற்போதைய பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட காரணத்தினால் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனை தொடர்ந்து 30 வருடகால சிவில் யுத்தம் தோற்றம் பெற்றது. கடன் பெற்று யுத்தத்திற்கு அதிக நிதி செலவிடப்பட்டது. 2009ஆம் ஆண்டு காலத்திற்கு பிறகு பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
துரதிஷ்டவசமாக கோ ஹோம் கோட்டா, நோ டீல் கம என குறிப்பிட நேரிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வெட்கமில்லை, இன்றும் பதவியில் இருக்கிறார்கள்.
இலங்கையில் முதலீடு
73 வருடகால தீர்க்கப்படாத தமிழர்களின் உரிமைசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் உலகளாவிய ரீதியில் உள்ள 13 இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்.
ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும், பதவி விலகாவிடின் குறைந்தபட்சம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் 13 இலட்சம் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது. இலங்கையர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளமையினை காண்கையில் வேதனையடைகிறோம். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மக்களின் நிலை தொடர்பில் அக்கறையில்லை.
இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முடியும். இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டால் அதன் தாக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களையும் செல்வாக்கு செலுத்தும்.
ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் பதவி விலகாவிடின் குறைந்தபட்சம்
தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு புலம்பெயர்
தமிழர்களின் முதலீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். பிளவுப்படாத இலங்கைக்குள்
தீர்வினையே கோருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.