மித்தெனிய ஐஸ் விவகாரம்: சரணடைய தயாராகும் சம்பத் மனம்பேரி
மித்தெனியவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரி எனும் நபர் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு தயாராகவிருப்பதாகச் சட்டத்தரணிகளின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் தாக்கல் செய்திருந்த ரிட் மனு நேற்று(16.09.2025) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சித்திரவதை
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் அடங்கிய 2 கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமது சேவை பெறுநரை கைது செய்வதற்காகப் பொலிஸார் தேடி வருவதாக மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
தனது சேவைபெறுநரின் சகோதரரான பியல் மனம்பேரியைக் கைது செய்து தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைத்துள்ளதாகவும், 78 வயதான அவரின் தந்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.
சேவைபெறுநரின் சகோதரர் தடுப்புக்காவலில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணை அதிகாரிகள்
விசாரணைகளுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைவதற்கும் சம்பத் மனம்பேரி தயாராகவிருக்கின்ற போதிலும், கைது செய்யப்பட்டதன் பின்னர் தனது சேவைபெறுநரை விசாரணை அதிகாரிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கும் சாத்தியமுள்ளதாகவும் சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.
தனக்குத் தெரிந்த சகல விடயங்களையும் கூறுவதற்குத் தனது சேவைபெறுநர் தயாராக இருப்பதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், விசாரணைக்கான சந்தர்ப்பத்தில் மனுதாரரான சம்பத் மனம்பேரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
மனுதாரரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்குத் தமக்குக் கீழுள்ள விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 16ஆம் திகதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




