யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) கடந்த 30ஆம் திகதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
அதனையடுத்து கொழும்பில் தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவருடைய உடல். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
சம்பந்தனின் இறுதி கிரியைகளிலும் அரசியல்
அதன் பின்னர், இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இடைப்பட்ட இந்த ஓரிரு நாட்களில் சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் அதனையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சம்பந்தனின் இறுதி நிகழ்வை வைத்து ஒரு சிலர் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஈழத்தமிழ் விவகாரங்களிற்கான தொடர்பாளராகவும் செயற்பட்ட மூத்த சட்டத்தரணி இராதாகிருஸ்னன், சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் இறுதி சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட நிலை தொடர்பிலும் தனது முகநூல் தளத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதில்,
“யாழில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப்பட்டது.
ஒரு வகையில் சம்பந்தனை வயது முதிர்ச்சியில், அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்திய சுமந்திரன் உயிரற்ற சம்பந்தனின் உடலையும் நூறு வீதம் அசிங்கப்படுத்தி, தமிழர் வரலாற்றில் கருணாவிற்கு இணையாக சம்பந்தனை மக்கள் நினைக்கும் படி செய்து வழியனுப்பிய செயல் மிகவும் அருவருக்கத்தக்கது.
உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உடல் தரை மார்க்கமாக எடுத்துச் சென்றால் தன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், சம்பந்தனை போன்று சுமந்திரன் கூறும் அத்தனைக்கும் தலையாட்டும் சம்பந்தன் வாரிசுகளை ஏமாற்றி சுமந்திரன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.
விமானத்தில் எடுத்து சென்றது ஒரு வகையில் காலச் சூழல் என்றாலும், தூக்குவதற்கு கட்சி தொண்டர்களை பயன்படுத்தாது இலங்கை படையினரை பயன் படுத்தியது மிக...மிக கவலையான செயல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.
சம்பந்தனை தூக்குவதற்கும் ஆட்கள் இல்லாத அவலம்..
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் அனாதைப் பூதவுடல் போல அங்கே வைக்கப்பட்டது.
தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை. பின்னர் பலத்த சிரமத்தின் மத்தியில் அங்கு வருகை தந்தவர்களை வைத்து காலையில் கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
சுமந்திரனின் பிடிவாதம் எப்படி எல்லாம் உயிரற்ற உடலையும் அசிங்கப்படுத்துகிறது என நினைத்துப் பாருங்கள். திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அசிங்கப்படுத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமந்திரனே உலகம் என இருந்த சம்பந்தன் நிலையை பாருங்கள், தந்தை செல்வநாயகத்தின் வயது முதிர்ச்சியிலும், அமிர்தலிங்கம் தந்தையை பராமரித்த விதம் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. எப்படி மாண்புடன் கடந்த காலங்களில் வளர்ந்த கட்சி இன்று கேள்விக் குறியாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |