திருமலையில் சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது.
மலரஞ்சலி
இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாரளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், சிறிநாத், கோடீஸ்வரன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் முக்கியப் பிரமுகர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நினைவேந்தலின் போது அமரர் இரா.சம்பந்தநின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி மற்றும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கலந்துகொண்ட தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் அவரது அரசியல் ஆளுமை குறித்த ஞாபகார்த்த உரைகள் நிகழ்த்தப்பட்டன.
அவரது நீண்டகால அரசியல் வாழ்க்கை வரலாறு, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புகள், நாடாளுமன்றத்திலும் சர்வதேச ரீதியிலும் அவர் பதித்த தீர்க்கமான அரசியல் தடயங்கள் மற்றும் அவரது தூரநோக்குச் சிந்தனைகள் குறித்து இதன்போது விரிவாக நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ரொஷான்
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (11)திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், பிரதேச சபை மற்றும் மாநகர சபை பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
விளக்கேற்றி, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரா. சம்பந்தனின் அரசியல் பயணத்தையும் தமிழர் சமூகத்திற்கான பங்களிப்புகளையும் நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றள்ளன.
இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் நினைவுப் பேருரையாற்றி, இரா. சம்பந்தனின் தலைமைத்துவம் மற்றும் அரசியல் சேவைகளை நினைவுகூர்ந்துள்ளார்.




