ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..!
சம்பந்தன் காலமாகி ஓராண்டு முடிந்துவிட்டதா? நண்பரும் மூத்த பதிரிகையாளருமான அண்ணன் தனபாலசிங்கம் சம்பந்தன் பற்றி கேட்கும் வரையில் சம்பந்தன் என்னும் பெயரே எனது நினைவில் இல்லை. பின்னர்தான், சம்பந்தன் பற்றி ஏதாவது கூட்டங்கள் நடந்ததா என்று தேடிப்பார்த்தேன் - அப்படி ஒன்றும் நடந்திருக்கவில்லை – எல்லோருமே அவரை மிகவும் இலகுவாக மறந்துவிட்டனர்.
சம்பந்தன் அரசியலை தீர்மானித்த காலத்தில் அவரது தலைமைத்துவம் போற்றப்படக் கூடிய ஒன்றாக இருக்கவில்லை. அவரால் செய்யக் கூடியதை அவர் செய்யவில்லை என்பதே எனது விமர்சனமாக இருந்தது.
அது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கின்றேன். ஆனால் சம்பந்தன் அரசியலை தீமானிக்கும் வரையில் தமிழ் தலைவர் என்னும் அடையாளத்தை தக்கவைத்திருந்தார்.
தன்னை மீறி எதனையும் செய்ய முடியாது என்னும் நிலைமையை கட்சிக்குள்ளும், கூட்டமைப்புக்குள்ளும் வைத்திருந்தார். இப்போது வீரவசனம் பேசும் தமிழரசு கட்சியின் அரசியல்வாதிகள் அனைவருமே அப்போது சம்பந்தனுக்கு முன்னால் மகுடிக்கு நெளியும் பாம்புகளாக இருந்தவர்கள்தான். அந்த வகையில் நோக்கினால் சம்பந்தன் இருக்கும் வரையில் தமிழர்களின் அரசியல் தலைவர் யார் என்னும் கேள்விக்கான பதிலாக அவர் இருந்தார் என்பது உண்மை.
சிறு பிள்ளைத்தனமான நம்பிக்கை
சம்பந்தன் என்னும் அரசியல்வாதியை முதல் முதலாக நான் சந்தித்த நாளை இப்போது நினைத்துப் பார்த்தால் தனிப்பட்ட ரீதியில் ஒரு நகைச்சுவை அனுவபத்தை தருவதுண்டு ஆனால் அரசியல்ரீதியில் நோக்கினால் அது மிகவும் கனதியானது. படித்தவர்கள் அதிலும் அப்புக்காத்துக்கள், ஆங்கிலத்தில் புரள்பவர்கள் என்றெல்லாம் தங்களை எண்ணிக்கொண்டவர்கள் எந்தளவு சிறுப்பிள்ளைத்தனமான நம்பிக்கையில் காலத்தை கடத்தியிருக்கின்றனர் என்பதற்கான சாட்சியாகவே அதனை நான் எண்ணுவதுண்டு.
நான் 1995ம் ஆண்டு, எனது கல்விப் பொதுத் தராதர உயர்தர பரிட்சை எழுதிவிட்டு, கால் போன போக்கில் அலைந்து கொண்டிருந்த நாட்கள். 1996இல் மீண்டுமொரு முறையும் பரிட்சை எழுதிப் பார்த்தேன். அப்போது பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் படிக்கவுமில்லை.
எனது தாயார் ஒரு அரசாங்க ஊழியர். வறிய குடும்பம்தான் என்றாலும் சாப்பாட்டுக்குப் பிரச்சினையிருக்கவில்லை. இப்படியான ஒரு நாளில்தான், உண்னை சம்பந்தன் ஜயாவிடம் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்று எனது தாயார் கூறினார். திருகோணமலை நகரத்திலுள்ள கந்தசுவாமி கோவிலுக்கு அருகைமையிலுள்ள சம்பந்தனின் இல்லத்திற்கு சென்றோம். பிராமணிய தோற்றத்தில் ஒருவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார்.
அவர்தான் சம்பந்தன். எனது தாயார் என்னை காண்பித்து, படித்துவிட்டு இருக்கின்றார் - அப்பாவும் இல்லை என்று தொடங்கி, வேலைக்கு உதவி செய்யுமாறு கூறினார். அன்று சம்பந்தன் கூறிய பதில் இப்போதும் எனது மனதில் பசுமரத்தாணி போன்று இருக்கின்றது. தங்கச்சி இது போன்ற சிறிய வேலைகளில் நான் ஈடுபடுவதில்லை – நான் அரசியல் தீர்வுக்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன் - நாங்கள் இப்போது சுவிஸ் அரசியல் யாப்பை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் - எதுக்கும் விபரங்களை தந்துவிட்டுச் செல்லுங்கள்.
அரசியல் தீர்மானம்
உண்மையில் எனக்கும் எனது தயாருக்கும் அப்போது சுவிட்சர்லாந்து என்றொரு நாடு இருப்பதே தெரியாது. காலம் எல்லோருக்குமுரியது. ஆற்றலுள்ளவர்கள் அதில் சவாரி செய்யலாம். எனது இலக்கிய ஈடுபாடு அரசியலின் பக்கமாக என்னை தள்ளிவிட்டது. வேலை வாய்ப்பு கேட்டுச் சென்ற சம்பந்தனுடன் அரசியல் பேசும் காலமும் கனிந்தது. 2015இல் நாடாளுமன்றத் தேர்தலில், சம்பந்தனுடன் இணைந்து திருகோணமலையில் போட்டிடும் நிலைமையும் உருவாகியது. 2010 நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான், நேர்காணல் ஒன்றுக்காக முதல் முதலாக சம்பந்தனை சந்தித்தேன்.
அந்த நேர்காணலில் சம்பந்தன் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். செல்வநாயகத்தின் தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பில் நான் கேள்வியை திருப்பிய போது ஒப் த ரெக்கோர்ட் என்றுவிட்டு, அது இந்தியாவிற்கு தேவையென்றால் வந்திருக்கும் என்றார். சம்பந்தனை அளவிடுவதற்கு அவரது அரசியல் வாழ்வை, 2009இற்கு முன்னர், 2009இற்கு பின்னர் என்று கட்டாயம் பிரித்தேயாக வேண்டும்.
கட்டாயம் என்று கூறுவதற்கு ஒரு காரணமுண்டு. 2009இற்கு முன்னர் தமிழர் அரசியலில் சம்பந்தன் ஒரு அரசியல் ஆளுமையாக இருக்கவில்லை - இருக்கவும் முடியாது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்திலும் சம்பந்தன் அரசியலை தீர்மானிக்கும் ஓரு நபராக இருந்திருக்கவில்லை.
எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கு பின்னரான தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது அமிர்தலிங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்தது. அப்படிப் பார்த்தால் ஈழ அரசியல் வரலாற்றில், சம்பந்தனின் காலம் என்பது 2009இற்கு பின்னரான காலம்தான்.
அவர் நோய்வாய்ப்பட்டு நான்கு சுவர்களுக்குள் முடங்கும் வரையில் ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலம் என்பது அவரது எண்ணங்களிலும் நடவடிக்கையிலுமே கட்டுண்டு கிடந்தது. ஈழ அரசியலில் சம்பந்தனுக்கு ஒரு தனித்துவமான இடமுண்டு. அதாவது, ஈழத் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, தமிழர் அரசியலுக்கு தலைமை தாங்கினார் என்றால் அது சம்பந்தன் மட்டும்தான்.
அவ்வாறானதொரு நிலைமை இனியேற்படும் என்று நான் நம்பவில்லை. ஆனால் அரசியல் பண்பில் - சம்பந்தனுக்கும் வடக்கிலிருந்து அரசியலை வழிநடத்தியவர்களுக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை.
பல்வேறு விமர்சனங்கள்
அனைவருமே அரசியலில் தவறுகளை விதைத்துச் சென்றவர்கள்தான் - எதையுமே அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாதவர்கள்தான் - தங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது பற்றிய தரிசனமின்றியே பயணம் செய்ய எத்தணித்தவர்கள்தான். செல்வநாயகம் தொடக்கம் பிரபாகரன் வரையில் அனைவரும் விட்டுச் சென்றிருப்பது தோல்வி ஒன்றை மட்டும்தான்.
இறுதியில் சம்பந்தனும் அந்தத் தோல்வியை பின்தொடர்ந்து, தோல்வியில் மூழ்கி, தன் காலத்தை நிறைவு செய்து கொண்டார். சம்பந்தன் அரசியலை தீர்மானித்த காலத்தில் அவரை பலர் பல விதமாக விமர்சித்ததுண்டு.
அவர் அரசின் நிகழ்சிநிரலுக்கு துணை போகின்றார், சர்வேதச விசாரணையை திசைதிருப்புகின்றார், ஒற்றையாட்சிக்குள் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை முடக்கும் சதிக்கு துணை போகின்றார் என்றெல்லாம் அவர் மீது கற்கள் வீசப்பட்டன.
ஆனால் உண்மையில் சம்பந்தன் அரசியலில் செய்த தவறு என்று ஒன்றைச் சொல்ல முடியும் என்றால் அது ஒன்றே ஒன்றுதான் - அதாவது, அவரால் செய்யக் கூடியதை அவர் செய்ய முயற்சிக்கவில்லை. அவரால் என்ன செய்திருக்க முடியும்? அவர் இருக்கின்ற போதே இது தொடர்பில் போதியளவு எழுதியிருக்கின்றேன்.
இந்த இடம்தான் சம்பந்தனுக்கு எதிராக என்னை திருப்பிய இடமும். யுத்தத்திற்கு பின்னரான அரசியல் காலகட்டத்தை எடுத்து நோக்கினால் சம்பந்தன் தென்னிலங்கையோடு கௌரவமாகப் பேசக் கூடிய காலமாக இருந்தது, 2015 – 2018 வரையான காலப்பகுதி மட்டும்தான். இந்தக் காலத்தில் நிலைமைகள் ஒப்பீட்டடிப்படையில் மிகவும் சாதகமாக இருந்தது. இந்தக் காலத்தில் அரசியலமைப்பின் பதின் மூன்றாவது திருச்சட்டத்தை அமுல்படுத்தும், அதிலிருந்து பயணிக்கும் விடயத்தை நகர்த்தியிருக்க முடியும்.
அதற்கான வாய்ப்பு கனிந்திருந்தது. ரணிலும் அதனை எதிர்த்திருக்கப் போவதில்லை மைத்திரிபால சிறிசேனவும் அதனை எதிர்த்திருக்கப் போவதில்லை ஏன் மகிந்த ராஜபக்சவும் எதிர்த்திருக்கப் போவதில்லை. இந்த விடயத்திற்கு தலைமை தாங்கக் கூடிய ஆற்றலும் அங்கீகாரமும் சம்பந்தனுக்கு இருந்தது. இந்த விடயத்தில் இந்திய ஆதரவையும் கோரியிருக்கலாம் - ஆனால் சம்பந்தனோ புதிய அரசியல் யாப்பு என்னும் மாய மானைத் தேடும் முயற்சியில் காலத்தை விரயம் செய்தார். நீங்கள் மாய மானுக்கு பின்னால் செல்கின்றீர்கள் என்று கூறியவர்களை ஏளனமாகப் பார்த்தார்.
ஆனால் காலமோ சம்பந்தனை ஏளனமாகப் பார்த்தது. அவ்வாறானதொரு அரசியல் யாப்பு வரவே முடியாது என்பதை என்னைப் போன்றவர்கள் கூறிக் கொண்டிருந்தோம் - இன்னும் பலரும் அது தொடர்பில் அப்போது பேசியிருந்தனர். “பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை தாண்டி நாங்கள் எங்கோயோ போய்விட்டோம் என்பதே சம்பந்தனின் பதிலாக இருந்தது” ஆனால் எங்கும் போகவுமில்லை – போகவும் முடியவில்லை – போகவும் முடியாது என்பதே இன்றும் ஈழத் தமிழருக்கு முன்னாலுள்ள அரசியல் யதார்த்தமாக இருக்கின்றது.
வேண்டுமானால் அதனையும் இழந்து இன்னும் கீழ் நிலைக்குச் செல்வது நடக்கலாம். சம்பந்தன் படித்தவர், அரசியலில் நீண்ட அனுபவமுள்ளவர், தென்னிலங்கை தலைவர்களை நன்கறிந்தவர் - இதற்குமப்பால் இந்தியாவின் கரிசனைகளை அறிந்தவர். ஆனாலும் சம்பந்தனால் அரசியலை யதார்த்தபூர்வமாக கையாளுவதில் வெற்றிபெற முடியவில்லை. இது சம்பந்தனுடைய தோல்வி மட்டும்தானா? நிச்சயமாக இல்லை.
சம்பந்தனின் தவறுக்குள் செல்வநாயகத்தின் தவறுகள், அமிர்தலிங்கத்தின் தவறுகள், பிரபாகரனின் தவறுகள் என அனைத்தும் அடங்கியிருக்கின்றது. முன்னையவர்களின் அரசியல் தவறுகளிலிருந்து தனது சிந்தனையையும் செயலையும் திட்டமிட சம்பந்தன் முயற்சிக்கவில்லை – அது பற்றிய உணர்வும் அவருக்கிருக்கவில்லை. இதனால் அவரது காலமும் தோல்வியின் காலமாக நீண்டு, முற்றுப்பெற்றது. ஈழ அரசியலில் முன்னைய தவறுகளின் நிழல் பின்தொடர அனுமதிக்கப்படும் வரையில், தோல்வியின் நிழலும் ஈழத் தமிழர்களை விட்டுவிலகப் போவதில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 06 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
