கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாகனத்தில் சமந்தபத்ர தேரர்! சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள சர்ச்சை
இலங்கையில் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி ஒன்றில், தன்னை அரஹந்தர் எனக் கூறும் சிறி சமந்தபத்ர தேரர், சுமார் 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியானதாகக் கூறப்படும் சொகுசு வாகனத்தில் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த காணொளி கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி வெளியாகியதைத் தொடர்ந்து, தேரரின் வாழ்க்கை முறை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நவீன வசதிகளுடன் கூடிய இருக்கை
குறித்த வாகனத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தோல் இருக்கைகள், LED விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் காணப்படுகின்றன. நீண்ட தூரப் பயணங்களின்போது கால்களில் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைப்பதற்காக வாகனம் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தேரர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
இருக்கை வசதிகளுக்காக மாத்திரம் பத்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடப்பட்டதாகவும் காணொளியில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த வாகனத்தின் உரிமை தொடர்பான தகவல்கள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
குருநாகல், மெல்சிறிபுர பகுதியில் அமைந்துள்ள ‘உமந்தாவ’ பௌத்த கிராமத்தை உருவாக்கிய சமந்தபத்ர தேரர், அங்கு அரிசி, வாசனைப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் வணிக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் விவாதங்கள்
இதற்கு முன்னரும், 2019ஆம் ஆண்டு அவரது பிறந்தநாள் நிகழ்வின்போது லூயி விட்டன் மற்றும் ஃபெண்டி போன்ற ஆடம்பர வர்த்தக நாமங்களைக் கொண்ட பொருட்கள் வழங்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பௌத்த பிக்குகளின் ஒழுக்க விதிகள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை தொடர்பான விவாதங்களும் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி சமந்தபத்ர தேரர் மல்வத்து மகா விகாரைக்கு அழைக்கப்பட்டு, ஊடகக் காட்சிப்படுத்தல்கள் உள்ளிட்ட சில செயற்பாடுகள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்னை அரஹந்தர் எனக் கூறும் தேரரின் ஆன்மிகக் கொள்கைகளுக்கும் ஆடம்பர வாழ்க்கை முறைக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
you may like this..
தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி 31 நிமிடங்கள் முன்
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam