மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சமன் ஏக்கநாயக்க
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமன் ஏக்கநாயக்க, தற்போது சிறைச்சாலையின் பொதுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விளக்கமறியல் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்ற பொழுது, அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இந்த வழக்கு நேற்று(28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.