கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சலே! மீண்டும் சிஐடியிடம் ஒப்படைப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சையின் பின்னர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுரேஷ் சலே நேற்று உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வைத்திய அதிகாரிகளின் பரிந்துரை
காதில் ஏற்பட்ட நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்ற நிலையில், வைத்திய அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வழக்கின் சந்தேகநபரான சுரேஷ் சலேவிற்கான வழக்கு இன்றைய தினம்(26) கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.