மன்னார் மதுபானசாலைகளில் புதிய நடைமுறை! விதிக்கப்பட்டுள்ள தடை
மன்னார் நகர் பகுதியில் உள்ள மதுபான சாலைகளில் பகல் நேரத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நேற்று(28)மன்னார் நகர சபையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள்,மன்னார் பொது சுகாதார வைத்தியதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபான சாலை உரிமையாளர் களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் 5 மாதங்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட கள் மதுபான சாலைகளில் விற்பனை செய்வதை நிறுத்தி தருமாறு உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருந்த போதிலும் குறித்த கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றது.
நேரக்கட்டுப்பாடு
இருப்பினும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மதுபான விற்பைனையாளர்களின் சம்மந்ததுடன் விற்பனை நேரக்கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மன்னார் நகர் பகுதியில் உள்ள மதுபான சாலைகளில் (Wine Stores) தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் கள் விற்பனையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.