குறைவடைந்துள்ள சம்பளம்! வெளியான அறிவிப்பு
பணவீக்கம் அதிகரித்து செல்வதால் மக்கள் உழைக்கும் சம்பளங்களின் பெறுமதிகள் குறைந்துவிட்டன என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீண்ட காலத்திட்டங்கள் என்று பார்க்கும்போது கடந்த நான்கு தசாப்தகாலமாக பேசப்பட்டு வருகின்ற ஏற்றுமதியை அதிகரிக்கின்ற ஏற்றுமதியை திசைமுகப்படுத்திய ஒரு முறையைத்தான் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் முன்வைத்திருக்கின்றனர்.
குறைவடைந்த சம்பளம்
இலங்கை ஒரு பக்கம் உணவு நெருக்கடி, உணவு உற்பத்தி வீழ்ச்சி, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டிய தேவை போன்ற நிலையிலுள்ளது. உணவு நெருக்கடி வராத நிலைமையை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
இதன் பின்னணியில் ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு மட்டும் கவனம் கொடுத்து மக்களுடைய தேவைகளை நிறைவு செய்ய முடியுமா என்பது கேள்வியாகும்.
பணவீக்கம் அதிகரித்து செல்வதால் மக்கள் உழைக்கும் சம்பளங்களின் பெறுமதிகள் குறைந்துவிட்டன. அதாவது உண்மை சம்பளம் என்று இதனை கூறுவார்கள். அது கிட்டத்தட்ட தற்போது 40 வீதமாக குறைவடைந்து இருக்கிறது.
ஏற்றுமதியில் வளர்ச்சி
அதேபோன்று அன்றாடம் தொழில் நடத்திப் பிழைப்பு நடத்துகின்றவர்களின் வருமானம் 50வீதத்தால் குறைவடைந்து விட்டதாக உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உணவு பொருட்களின் பணவீக்கமானது 90வீதமாக உயர்ந்துள்ளது. அதனால் மக்களின் உணவுக்கான செலவும் அதிகரித்துவிட்டது. இவை கவனத்தில் கொள்ளப்பட்டு பொருத்தமான பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை.
சர்வதேச நாணயத்துடனான உடன்பாடு வந்தாலும் வராவிட்டாலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் எப்படியும் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்படும்.
எனவே மக்கள் பயனடையாத வகையில் இந்த பொருளாதார வளர்ச்சி அடையப் போகின்றதா என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.