அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவே வேட்பாளராக நிறுத்தப்படுவார்! ஐக்கிய மக்கள் சக்தி
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அதன் தலைவரான சஜித் பிரேமதாசவையே வேட்பாளராக நிறுத்தும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
2021ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் தற்போது உருவாக்கி வருகின்றோம்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரையே நாங்கள் வேட்பாளராக நிறுத்துவோம்.
ஐக்கிய தேசியக் கட்சி வேறு கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பை நாம் அறிவோம்.
இதனால் மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டோம். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சஜித் பிரேமதாச ஏற்கனவே தயாராகவே உள்ளார். அவர் அனுபவங்களை கொண்ட தலைவர்.
அத்துடன் நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றவர். இதனால், எதிர்காலத்தில் நாங்கள் அமைக்கும் கூட்டணியின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இருப்பார் என நாங்கள் நம்புகிறோம்.
சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.