ஸ்மார்ட் இலங்கையை உருவாக்குவேன் : சஜித் உறுதி
ஐக்கிய மக்கள் சக்தியானது ஸ்மார்ட் கல்வியைப் போலவே ஸ்மார்ட் விவசாயத்தையும் உருவாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் (Anuradhapura) இடம்பெற்ற ஸ்மார்ட் வகுப்பறைகள் வேலைத்திட்டத்திற்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"இஸ்ரேல் (Israel) போன்ற நாடுகளில் பயிரிடுவதற்கு ஏற்ற சூழல் இல்லாவிட்டாலும் பயிரிடுவதில் சிறந்து விளங்குகின்றனர்.
ஸ்மார்ட் விவசாயம்
ஏனென்றால், அவர்கள் சொட்டு நீர்ப்பாசனம், பசுமைக்குடில் போன்ற ஸ்மார்ட் முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, இரண்டு பருவங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட நம் நாட்டின் விவசாய சுழற்சியை வலுப்படுத்தி ஒரு இடைப்பட்ட பருவத்தில் மேலதிக செய்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
விவசாயிகளின் பயிர்களுக்கு நிலையான விலை கிடைப்பதோடு களஞ்சியங்கள் உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும்.
இதன் ஊடாக நாம் முன்னோக்கிச் செல்ல முடியும்.
அதேவேளை, நமது நாடு 100 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ளதால் பல குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்துள்ளனர்.
எனவே, வெறும் வாய்ச்சவடால் விடும் தலைவர்கள் போலன்றி மக்களின் துன்பத்தை அறிந்து செயற்படும் தலைவராக மாறுவேன். இந்த வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவது தான் ஒரே தீர்வு.
வங்குரோத்து நிலை
மேலும், 41 இலட்சம் பாடசாலை பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்கு இந்நாட்டிலுள்ள எந்தவொரு தலைவரும் வழங்காத அற்புதமான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றேன்.
2019ஆம் ஆண்டு, நாடு ஏமாற்றுத் தலைவரின் பக்கம் சென்றதன் காரணமாக வங்குரோத்து நிலைக்கு சென்றது.
எனவே, 2024ஆம் ஆண்டிலாவது ஸ்மார்ட் நாட்டை உருவாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்.
அதிகாரம் இல்லாமல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செல்வந்தர்களின் உதவியைப் பெற்று பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அரசு ஒதுக்கும் பணத்தை வைத்து இந்த துறைகளை மேம்படுத்த முடியாது.
ஆகையால், நாட்டின் இந்த அசாதாரண சூழ்நிலையில் சட்டகங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் புதிய வழியில் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |