தேர்தலைப் பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறிய ரணில்: சஜித் தெரிவிப்பு
ரணில் விக்ரமசிங்க எனும் பதில் ஜனாதிபதி உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையையே மீறி இருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மொரட்டுவையில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 9ஆவது மக்கள் பேரணி கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உரையாற்றுகையில்,
"ஜனாதிபதி உள்ளிட்ட அரசு நமது சுய இலாபத்திற்காக வங்கரோத்து அடைந்த நாட்டில் தேசிய வளங்களையும் சொத்துக்களையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர். சிரமப்படுகின்ற மக்களுக்கு வழங்க வேண்டியவைகளை புறக்கணித்து மக்களுக்கு விரோதமான முறையில் அரச நிர்வாகம் ஒன்றை தற்போது முன்னெடுக்கின்றனர்.
நீதிமன்ற தீர்ப்பு
நான் என்கின்ற மமதையுடன் ஆட்சி யுகம் ஒன்றை ஏற்படுத்தி தனது அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அதிகபட்ச தந்திரங்களை பயன்படுத்தி, அரசியல் யாப்பு விதிமுறைகளை மீறி, நிறைவேற்று அதிகாரத்தைத் தான்தோன்றித்தனமாகப் பாவித்து அவர்களுடைய அரசியல் ஆயுட்காலத்தை நீடித்துக் கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொள்கின்ற இந்த இருண்ட யுகத்தை தோல்வி அடையச் செய்து, பொது மக்களுக்கான யுகத்தை நோக்கி செல்வதற்கு ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
இந்த அரசியலில் தலைகள் இடம்மாறிக் கொண்டிருக்கின்றன. பணத்துக்காகவும், தரகுத் தொகைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும், மதுபான நிலையங்களுக்காகவும் தமது சுய கௌரவத்தை இழக்கின்ற ஒரு அரசியல் கலாசாரம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாம் உள்ளிட்டவர்கள் எடுத்திருக்கின்ற தீர்மானம் குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
அதிலும் பல அழுத்தங்களும் கோரிக்கைகளும் வந்தாலும் திருடர்களோடு அல்லாமல் 220 இலட்சம் மக்களோடு ஒன்றாக இருப்பதற்கு நாமும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் தீர்மானித்தோம். நான் எடுத்த தீர்மானம் சரியானது என்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நிறுத்துவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடு என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உட்பட ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய தீர்ப்பு சுட்டிக்காட்டுகின்றது. இந்தத் தன்னிச்சையான தான்தோன்றித்தனமான தீர்மானத்திற்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும்.
நாட்டு மக்கள்
நிதி அமைச்சராக அவர் மக்களின் அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த உயரிய சட்டத்தை மீறுகின்ற நாடானது ஏல நிலமாக மாற்றுகின்ற ஆட்சியாளர்களோடு ஒன்றாக இருக்க முடியாது.
இன்னும் சில தினங்களில் பொது மக்களின் யுகத்தை ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும். மக்களின் அடிப்படை உரிமையை மீறிய ஒருவராகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கி இருக்கின்றார்.
மக்களின் வாக்குரிமையை மீறச் செய்திருக்கின்ற இவர்கள் எதிர்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்.
நாட்டைச் சீரழித்து மக்களை ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களின் ஆதரவோடு நியமிக்கப்பட்ட ஜனாதிபதியையும், இந்த ஆட்சியையும் நிராகரித்து மக்களின் துன்ப துயரங்களை உணருகின்ற ஆட்சி ஒன்றை கொண்டு வருவதற்கு ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
220 இலட்சம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் தேசியக் கொள்கை ஒன்று முன்னெடுக்கப்படும். ஜனாதிபதி நடமாடும் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படும். இந்த நாட்டில் பெரும்பான்மையானோர் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள். நான் ஜனாதிபதியானவுடன் ஜனநாயகத்துடன் கூடிய வளமான நாடொன்றைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன்" என குறிப்பி்ட்டுள்ளார்.