ஞானசார தேரருக்காக குரல் கொடுக்கும் சஜித் பிரேமதாச
அரசாங்கம் சமய மரபுகளையும் காவி உடையின் கௌரவத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இன்றயை தினம் சிவில் உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இவ்வாறு தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றங்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதாகவும் அதனை மீறிச் செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சமூக மரபுகள், கலாச்சார அடையாளங்களை பேணுவம் விவகாரத்தில் அரசாங்கம் மிகவும் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஞானசார தேரரை சிவில் உடையில் நீதிமன்றம் அழைத்து வரும் காட்சிகளை தாம் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் அல்லது வேறும் மதத் தலைவர்கள் அவர்களது விருப்பமின்றி அல்லது அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மத நிறுவனங்களின் உச்ச பீடங்களுக்கு அறிவிக்காது சிவில் ஆடைகளில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விடயங்களின் போது மூன்று பீடங்களின் மாநாயக்க தேரர்களின் அனுமதியை அரசாங்கம் பெற்றுக் கொள்வதே பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.