உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் ஜனாதிபதி எவ்வாறு கருத்து வெளியிட முடியும்: சஜித் கேள்வி
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எவ்வாறு கருத்துக்களை வெளியிட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி எவ்வாறு பகிரங்கமாகத் தெரிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, 20வது திருத்தச் சட்டத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என முன்னர் வாதிட்ட ஜனாதிபதி, தற்போது 22வது திருத்தத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை எனக் கூறுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடும் விமர்சனம்
அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடித் தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன்பே, தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மை குறித்து ஜனாதிபதி எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்றும் அவர் வினவினார்.
ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பிய கரிசனைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து சஜித் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தம், நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான 'லடிமர் ஹவுஸ் கோட்பாடுகளை' பலவீனப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சர்வதேச அமைப்பின் பங்களிப்பை அரசாங்கம் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைச் சந்திக்க அதிகாரிகள் மறுத்ததாகக் குறிப்பிட்ட சஜித், இது தொடர்பாக நீதியமைச்சர் அச்சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் ஒருசேர பலவீனப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்க முயன்றால் அதனை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்ட இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.