ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சி செய்யக்கூடியவர்களிடம் ஒப்படைக்கவும் - சஜித்
ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சி செய்ய தகுதியுடையவர்களிடம் நாட்டை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்காது எரிபொருள் விலையை குறைத்து நிவாரணங்களை உடன் வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்யவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் அதனை செய்யக் கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்விற்கு எதிர்ப்பை வெளியிட்டு இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசாங்கம் மக்களை மேலும் மேலும் துன்புறுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று, வேலையில்லா பிரச்சினை, உர பிரச்சினை, பிள்ளைகளின் கல்வி பிரச்சினை என நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
மக்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படவில்லை, அரசியல் செல்வாக்கு உடையவர்கள் மட்டுமே கோவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொள்கின்றனர்.
எரிபொருள் விலையை உயர்த்திய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
யார் நாட்டுப் பற்றாளர்கள் யார் தேசத் துரோகிகள் என்பதனை இந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது மக்கள் புரிந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.