பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குங்கள் - சஜித் கோரிக்கை
சம்பள அதிகரிப்புடன் நின்றுவிடாது பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குங்கள் என அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களை நேற்றையதினம் (15.11.2025) சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போதைய 1,350 ரூபா சம்பளத்துடன், 400 ரூபா அதிகரிப்பை வரவு - செலவுத் திட்டத்தில் அரசு முன்மொழிந்துள்ளது.
மகிழ்ச்சியான தீர்மானம்
சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் 200 ரூபாவையும், அரசு 200 ரூபாவையும் செலுத்தும் தீர்மானத்துக்கு வந்துள்ளது.
துயர் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வரும் பெருந்தோட்டச் சமூகத்தினருக்கு, இந்த 400 ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள எடுத்த தீர்மானம் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்தத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். பெருந்தோட்டச் சமூகத்துக்குச் சம்பளம் கிடைத்தால், அது ஒரு நல்ல விடயமாகும்.
அவ்வாறே இது சாதகமான விடயமுமாக அமைந்து காணப்படுகின்றது. அரசால் இவ்வாறு நிதிகளை ஒதுக்க முடியும்.
பயிரிடுவதற்கான உரிமை
கோவிட் - 19 தொற்றுநோய் ஏற்பட்ட சமயம், வீழ்ச்சி கண்ட தொழிற்துறைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஐக்கிய இராச்சிய அரசு நிதியை ஒதுக்கீடு செய்தது. இவ்வாறு நிதிகளை ஒதுக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதால் மாத்திரமல்லாது, பெருந்தோட்டத் துறையில் குறைந்த அளவில் பயன்படுத்தப்படும், முற்றிலுமே பயன்படுத்தப்படாத காணிகளில் பயிரிடுவதற்கான உரிமையை வழங்கி, அவர்களைச் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் பெருந்தோட்டச் சமூகத்தை வலுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |