கட்டாய உடல் தகன நடவடிக்கைக்கு மன்னிப்புக் கோரித் தப்பிக்க முடியாது : சஜித் தெரிவிப்பு
கோவிட் -19 தொற்று காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய உடல் தகனக் கொள்கைக்கு மன்னிப்பு கோருவதற்கான அமைச்சரவையின் முடிவை வரவேற்கின்றோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தார்.
கோட்டாபய அரசாங்கத்தின் தீர்மானம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் கட்டாய உடற் தகனக் கொள்கைக்கு அப்போது ஆதரவளித்தனர்.
இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய, கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டன. முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கமா, தகனமா என்ற விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவை தவறான தீர்மானத்தை எடுத்தது.
இந்த தீர்மானம் எந்த நபரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது? அதற்கான ஆலோசனை வழங்கியவர் யார்? இந்த ஆலோசனை தொடர்பாக அரசியல் தலைமைகள் பரிசீலித்து ஆராய்ந்து பார்க்காததன் காரணம் என்ன? போன்ற விடயங்கள் தொடர்பான காரணங்களை முன்வைக்க வேண்டும். எனவே இந்த விடயத்தில் மன்னிப்பு கோரி, தப்பிக்க முடியாது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |