காசா இனப்படுகொலையாளிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.. சஜித் திட்டவட்டம்
காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடும் தரப்புடன் எங்களுக்கு நட்புறவு கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - இலங்கை நட்புறவு சங்கத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்ஹ விடுத்திருந்தார்.
இது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. பின்னர் அவர் மன்னிப்புக் கோரி, அதற்குரிய முயற்சியை கைவிட்டார். இந்நிலையிலேயே சஜித் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச பயங்கரவாத கலாசாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், "பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக நாம் முன்னிற்கின்றோம். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என்பன சமரசத்துடன் செயற்பட வேண்டும் என்பது எமது கொள்கை.
பாலஸ்தீனமானது இன்று இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகின்றது. காசாவில் இன்று இனப்படுகொலை நடக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
வைத்தியசாலைகளுக்குக் குண்டுகளைப் போட்டு, படுகொலையில் ஈடுபடும் அரச பயங்கரவாத கலாசாரம் முடிவுக்கு வரும் வரை, அந்தத் தரப்புடன் எமக்கு நட்புறவு கிடையாது. சங்கமும் கிடையாது.
இது விடயத்தில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இதுதான் எமது கொள்கை - நிலைப்பாடு. எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியமாட்டோம். அழுத்தங்களால் எமது நிலைப்பாடு மாறப்போவதும் இல்லை." என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




