ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானங்கள் சரியானவை! எதிர்க்கட்சித் தலைவர்
அமைச்சு பதவிகளை ஏற்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானங்கள் சரியானவை என பல சந்தர்ப்பங்களில் நிரூபணமாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினருடன் நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் சுயநலமான தீர்மானங்கள்
அவர் மேலும் கூறுகையில், வங்குரோத்து அடைந்துள்ள நாடு மற்றும் வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கத்தில் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வங்குரோத்து அடைந்து தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் இவ்வாறான முட்டாள் தனமான, சுயநலமான தீர்மானங்களை எடுக்க மாட்டார்கள்.
இந்த செயற்பாட்டை மிகவும் கீழ்தரமான செயற்பாடாகவும், மக்களின் நலன் கருதாமல் அமைச்சு பதவிகளை மாத்திரம் கருதி செயற்படும் ஒரு நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தங்களுக்கு விரும்பிய பதவிகைளை கேட்டுக் கொண்டு பதவி ஏலம் ஒன்றிற்கு அனைவரும் செல்கின்றார்கள்.
134 பேர் ஒன்றிணைந்து ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொண்டு இவ்வாறு பதவிகளை பறிமாற்றிக் கொண்டிருந்தால் நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்கள் என்ன செய்வார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் நிலவுகின்றன. நாட்டிலுள்ள அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ரிஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலையில் உணவு தட்டுப்பாடு நிலவுவதாக கூறுகின்றார்கள். ரிஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலைக்கு உணவு பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு 37 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கின்றது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானங்கள்
மேலும், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானங்கள் சரியா பிழையா என தற்போது நாட்டு மக்களுக்கு தெரியும்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானங்கள் மிகவும் சரியானது என தற்போது உறுதியாகியுள்ளது.
அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று என மக்கள் கூறுகின்றார்கள். ஆனால் நாங்கள் வித்தியாசமானவர்கள் என தெரிவித்துள்ளார்.