ரணில் - சஜித் அணிகள் ஒன்றிணைய கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவக்குழு முடிவு
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்த வேண்டும் எனக் கட்சியின் முகாமைத்துவக்குழு முடிவெடுத்தது.
அதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியது. இதற்கமைய பொது இடமொன்றில் வெகுவிரைவில் பேச்சுகள் ஆரம்பமாகும் என குறிப்பிட்டுள்ளார்.