தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் விசேட கலந்துரையாடல்
எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு ,கிழக்கு மற்றும் மலையக தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இன்று(22.10.2026) இடம்பெற்றுள்ளது.
மக்களின் பிரச்சினைகள்
இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பெடுத்துக் கொண்டுள்ளார். குறித்த சந்திப்பின்போது வடக்கு மற்றும் கிழக்கு, மலையகப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளில் காணப்படும் குறைபாடுகள், சுகாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் மனோ கணேசன், பீ. சத்தியலிங்கம், முஜிபுர் ரஹ்மான், எம்.எஸ். உதுமாலெப்பை, காதர் மஸ்தான், வீ.ராதாகிருஷ்ணன், ஹபீப் றிபான், கோடீஸ்வரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.