மக்கள் ஆணைக்குத் துரோகமிழைக்காதீர்! அநுர அரசின் மீது சஜித் ஆதங்கம்!
தற்போதைய அரசு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அரசுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும், நாட்டில் மனிதாபிமான ரீதியாக ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில்,
"ஸ்திரமான நாடு உருவாகி வருகின்றது என்ற நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், மக்கள் பெரும் ஆணையைப் பெற்றுத் தந்தது ஏலவே காணப்பட்ட சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்காகவா எனக் கேள்வி எழுப்புகின்றேன். ஒருபோதும், மக்கள் ஆணைக்குத் துரோகமிழைக்காதீர்கள்.
மறுசீரமைப்பு பகுப்பாய்வு
இந்த அரசு புதிய கடன் மறுசீரமைப்பு பகுப்பாய்வொன்றை மேற்கொண்டு புதிய ஐ.எம்.எப். இணக்கப்பாட்டை எட்டுவோம் என்ற அறிவிப்பை கிடப்பில் போட்டு, மக்கள் வழங்கிய ஆணையைக் காலில் போட்டு மிதித்துத் தூள் தூளாக்கி விட்டது.
பெரும் மக்கள் சார் அரசு எனக் கூறிக்கொண்டு, மக்கள் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அதிகரித்ததாகக் கூறப்பட்ட உர மானியம் இன்னும் உரியவர்களுக்குக் கிடைக்கவில்லை.
நமது நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் இந்த மானியத்தைப் பெறவில்லை. விவசாய நடவடிக்கைகள் ஏறக்குறைய நிறைவடைந்து வரும் வேளையிலும் கூட, இந்த உர மானியங்கள் இன்னும் உரியவர்களுக்கு போய்ச்சேரவில்லை.
ஸ்திரமான நாடு
ஸ்திரமான நாடு உருவாகி விட்டது என்றால் 9 ஆயிரம் ரூபா மின் கட்டணம் 6 ஆயிரம் ரூபாவாகவும், 3 ஆயிரம் ரூபா மின் கட்டணம் 2 ஆயிரம் ரூபாவாகவும் மாறுவது எப்போது?
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் கடந்த அரசின் பொருளாதாரக் கொள்கையை மாற்றியமைத்து, உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியில் இருந்து பெறப்பட்ட தொகையை உரிய மக்களுக்கு நிவாரணமாக வழங்கும் திகதியைத் தெரிவியுங்கள்.
சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுக்கு நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது குறையும் கடன் தொகைச் சலுகை கிடைக்கின்றது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |