சஜித் -அனுர விவாதத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை: சட்டத்தரணிகள் சங்கம் திட்டவட்டம்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும்(Sajith Premadasa), தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும்(Anura Kumara Dissanayake) இடையிலான விவாதத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. ஆகியவற்றின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி சார்ந்த விவாதமொன்றுக்கு பரஸ்பரம் அழைத்து விடுத்துள்ளனர்.
அதற்காக அண்மையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் மே மாதத்தின் மூன்று நாட்களைக் குறிப்பிட்டு விவாதத்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
எனினும் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த நாட்களில் வேறு பணிகளை முன்கூட்டியே பொருந்திக் கொண்டிருப்பதன் காரணமாக அதனை பிறிதொரு தினத்தில் ஏற்பாடு செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்திருந்தது அதன் காரணமாக விவாதத்திற்கான நாள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் விவாதத்தை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை கடிதமொன்றை கையளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவாதத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், இரு வேட்பாளர்களுக்கிடையில் மாத்திரம் விவாதம் நடத்துவது சிக்கலான விடயம் என எனவும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |