சஜித்தின் உள ஆரோக்கியம் குறித்து அரசாங்கம் கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உள ஆரோக்கியம் தொடர்பில் அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சஜித் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு முன், அவரது மனநிலையை முதலில் ஆராய வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த
முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டாம் எனக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் முன்னதாக மத்துகம பகுதியில் அமைந்துள்ள சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இருந்தபோதிலும், அதே கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தற்போது அரசிடம் அவர் கோருவது நகைப்பிற்குரியதாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கல்வி சீர்திருத்தங்கள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்திலும் சஜித் பிரேமதாச போன்ற நபர்கள் உருவாகும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

அதனால்தான் இந்த சீர்திருத்தங்களை கட்டாயமாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தத் திட்டம் இன்றைய தினம் தொடக்கம் முதலாம் தரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதன்படி ஆறாம் வகுப்பைத் தவிர்ந்த பிற வகுப்புகளுக்கு கட்டங்களாக இந்த சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செயல்முறை கல்வி அமைச்சும் தேசிய கல்வி ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுக்கவுள்ளதுடன், அதற்கான திட்டங்கள் தற்போது தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர், புதிய மொட்யூல்களில் 147 பிரச்சினைகள் உள்ளன என சஜித் பிரேமதாச கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாச அவர்களின் தாளத்திற்கு ஏற்ப நாம் செயல்பட முடியாது எனவும் அவர் கூறும் கருத்துகளிலிருந்து, இந்த மொட்யூல்களை அவர் வாசித்தாரா என்பதே சந்தேகமாக உள்ளது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.