சர்சைக்குரிய சாட்டி மாவீரர் துயிலுமில்ல விவகாரம்.. பிரதேச சபை வழங்கியுள்ள விசேட அனுமதி
யாழ். வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில், அதற்கு முன்னால் அமைந்துள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் நினைவுகூர வேலணை பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று நடைபெற்றது.
இதன்போது சாட்டி மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் நினைவேந்தலை நடத்துவதற்குத் தனிநபர் ஒருவர் காணி உரிமை கோரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை தொடர்பான விடயம் விரிவாக ஆராயப்பட்து.
பிரதேச சபையின் காணி
இந்தச் சூழ்நிலையில், துயிலுமில்ல வளாகத்திற்குள் நிகழ்வுகளை நடத்தத் தடை ஏற்படும் சந்தர்ப்பத்தில், அதற்கு அருகிலுள்ள பிரதேச சபையின் ஆதனத்தில் மக்கள் தமது உறவுகளை நினைவுகூருவதற்கு ஏதுவாக அனுமதி வழங்குவதெனச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பான விவாதம் சபையில் இடம்பெற்ற போது, அதனைப் புறக்கணித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தனர்.
முன்னதாக, சாட்டி துயிலுமில்லக் காணி தம்முடையது எனக் கூறி தனிநபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸாரால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தடை உத்தரவு கோரும் விண்ணப்பம் நாளை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலதிக தகவல் - தீபன்
அதேநேரம், மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் (19) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
நானாட்டான் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள 45 கிராமங்களில் இருந்து 225க்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை, கலந்து கொண்டிருந்தனர்.

செய்தி - ஆசிக்
மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்கள் பெற்றோர்கள், உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வு பருத்திதுறையில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
செய்தி - எரிமலை