சர்வதேச நாணய நிதியத்துக்கு உறுதியளித்த திட்டங்களை நிறைவேற்ற தவறியுள்ள இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின்(International Monetary Fund), இலங்கைக்கான திட்டத்தின்கீழ், வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான பல உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெரிடே ரிசர்ச் என்ற ஒரு சுயாதீன சிந்தனைக் குழுவின், அண்மைய புதுப்பிப்பின்படி, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் 2024 ஏப்ரல் இறுதியில் இலங்கை தனது கடமைகளில் 30வீதத்தை பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாக சீர்திருத்தங்கள்
இதில் பெரும்பாலானவை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் சட்டத்தை இயற்றுவது தொடர்பானது.அதன்படி, நிறைவேற்றாத உறுதிமொழிகளில் 53 வீதமானவை வெளியீட்டுத் தேவைகள் தொடர்பானவையாகும்.
21வீதமானவை சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பானவையாகும். 26 வீதம் ஏனைய உறுதிமொழிகளாகும். இந்தநிலையில் இலங்கை, நிர்வாக சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய முக்கியமான தேவையை வெரிடே ரிசர்ச் கோடிட்டுக் காட்டியுள்ளது.
மேலும், வெளிப்படைத்தன்மை தொடர்பில் நிறைவேற்றத் தவறிய கடமைகளில், பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் வரி விலக்குகள் மதிப்பீடு, 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகளை உறுதி செய்தல் உட்பட்ட விடயங்கள் அடங்கியுள்ளன.
சட்டம் இயற்றும் அடிப்படையில், பணவீக்கத்திற்கான பயிற்சிகளின் தானியங்கி அட்டவணையை அறிமுகப்படுத்துதல், பொது நிதி மேலாண்மை சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல், சொத்துக்களை மீட்பதற்கான சட்டத்தை இயற்றுதல் மற்றும் கடன் முகாமைத்துவம் போன்ற சட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |