உக்ரைன் போரில் புதிய வியூகம்! புடினை சந்திக்க சீன ஜனாதிபதி ரஷ்யா பயணம்
உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பயணம் செய்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
உக்ரைன் மீதான மாஸ்கோ ஆக்கிரமிப்புக்கு மேற்குலக கண்டனம் தெரிவித்த போதிலும், தலைவர்களின் வலுவான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எதிர்வரும் திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளார்.
இது ரஷ்ய இறையாண்மை மற்றும் ரஷ்யர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் போர். இது ஒரு மூன்றாம் தர போர் அல்ல. என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஜி ஜின்பிங்- விளாடிமிர் புடின் முக்கிய சந்திப்பு
போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உக்ரைன் தலைநகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென பயணம் மேற்கொண்டு, மேலும் ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இது அமைதியை விரும்பும் சீனாவிற்கும், ரஷ்யாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. சமாதான பேச்சு வார்த்தைக்கு உக்ரைனை வரவிடாமல் தடுத்து போரை நீட்டிக்கும் அமெரிக்கா என சீனா கடுமையாக தாக்கி பேசியது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு சீனா ஆயுதம் வழங்க உள்ளதாக தகவல்கள் பரவின. அதற்கு ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கடுமையாக கண்டனம் தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் சீனா தன்னை ஒரு நடுநிலை நாடாக சித்தரிக்க முயன்றது, ஆனால் அதன் நிலைப்பாடு சில மேற்கத்திய தலைவர்களால் நம்பகத்தன்மை இல்லாதது மற்றும் ரஷ்யாவிற்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதாக விமர்சிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
உக்ரைன் போரின் அடுத்த கட்ட நகர்வு
இது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும். “ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில், அதிபர் ஜி ஜின்பிங் மார்ச் 20 முதல் 22 வரை ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணமாகச் செல்வார்” என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு தலைவர்களும் "ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முழுமையான கூட்டாண்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது பற்றி விவாதிப்பார்கள்", சர்வதேச அரங்கில் உட்பட, "முக்கியமான இருதரப்பு ஆவணங்களில் கையெழுத்திடப்படும்" என்று ரஷ்யா கூறியுள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. இது உக்ரைன் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.