உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது: நாள் குறித்த ரஷ்யா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் நாஜி படைகளை ரஷ்ய துருப்புகள் வென்ற மே 9ம் திகதி, உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டு தோறும் மே 9ம் திகதியை போர் வெற்றி விழாவாக ரஷ்யா கொண்டாடி வரும் நிலையில், தற்போது, அதே நாளில் உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டமிடுகிறது.
இரண்டாம் உலகப் போரின் வெற்றி விழாவை ரஷ்யா மிக பிரமாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
குறித்த நாளில் தேசிய விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் தொழிற்கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இந்த வெற்றி விழாவானது உலகில் அதிகம் மக்கள் பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும்.
கோவிட் பரவல் காரணமாக 2020ல் மட்டும் மே 9ம் திகதி விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஜூன் 24ம் திகதி புடின் ஆணைக்கிணங்க விழா கொண்டாடப்பட்டது.
இதனிடையே, இதுவரை திரட்டப்பட்ட தகவல்களில் இருந்து எதிர்வரும் மே 9ம் திகதி உக்ரைன் போரும் முடிவுக்கு வரும் என்ற தகவல் தங்களுக்கு தெரிய வந்துள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் எல்லையில், போருக்கு முன்னர் நிறுவப்பட்ட மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையிலான காயம்பட்ட வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில், ரஷ்ய துருப்புகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், கைப்பற்றப்பட்ட பகுதிகளில் ரஷ்ய துருப்புகள் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போயுள்ளதாகவும் உக்ரைன் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா பகுதியில் சுமார் 100 வீரர்களுக்கான இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதேப்போன்று Sevastopol நகரிலும் ரஷ்ய துருப்புகள் இறுதிச்சடங்குகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.